search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்"

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ணுவது பற்றி தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt

    புதுடெல்லி,:

    தேர்தலின்போது ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சை நிலவியபடி உள்ளது.

    மின்னணு எந்திரத்தில் உள்ள எந்த பட்டணை அழுத்தினாலும் அது குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டாக மாறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மின்னணு எந்திரத்தில் பா.ஜனதாவினர் தில்லு முல்லு செய்ததால்தான் வெற்றி பெற முடிந்தது என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, “ஒவ்வொரு ஓட்டுப்பதிவு எந்திரத்துடனும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் இணைக்கப்பட வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் அது இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

    இதை ஏற்று தேர்தல் ஆணையம் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் ஒப்புகை சீட்டு தரும் எந்திரத்தை இணைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது.

    அதில் ஒவ்வொரு தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்களில் இருந்தும் ஏதாவது ஒரு ஓட்டுச்சாவடியின் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் எடுத்து ஆய்வு செய்யப்படும் என்று கூறியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக தெலுங்கு தேசகட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 கட்சிகள் மனுதாக்கல் செய்தன.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

    அவர்கள் தங்கள் மனுவில் மின்னணு எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளில் 50 சதவீதத்தை எண்ண வேண்டும். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 50 சதவீத ஒப்புகை சீட்டு எண்ணப்பட்டால்தான் சரியாக இருக்கும்.

    தேர்தல் கமி‌ஷன் வழி காட்டுதல் படி செயல்பட்டால் அது ஒப்புகை சீட்டு திட்டத்துக்கு எதிராகத் தான் இருக்கும். எனவே ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத ஒப்புகைச் சீட்டை எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட பெஞ்சில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டுக்கு உதவ தேர்தல் அதிகாரி ஒருவரை நியமனம் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt

    ×